திமுகவினரின் அராஜகத்தையும், அத்துமீறலையும் கட்டுப்படுத்தினாலே 50% குற்றங்கள் குறைந்து விடும்- ஓபிஎஸ் பேச்சு.!

மிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது.

சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரி என்ற பக்கம்தான் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட காவல் துறையையே மிரட்டும் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்களும் தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. அண்மையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் விசாரணை மேற்கொண்டிருந்த காவல் ஆய்வாளரை, கொளத்துப்பாளையம் நகர தி.மு.க. செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த ஆய்வாளர் மறுக்கவே, “தொப்பியை கழட்டி விடுவேன், ஜாக்கிரதை” என்று ஆய்வாளரை தி.மு.க. செயலாளர் மிரட்டியுள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதே திருப்பூர் மாவட்டம், அவிநாசி, நம்பியாம்பாளையத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த தி.மு.க. நிர்வாகி அங்குள்ள உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிகப் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது. தமிழ்நாட்டில் காவல் துறையினரையும், பொதுமக்களையும் மிரட்டும் அளவுக்கு தி.மு.க.வின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ‘திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்’ என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து தி.மு.க. கூட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. சாதனை என்ற பெயரில் மக்களுக்கு வேதனையை தி.மு.க.வினர் அளித்து வருகின்றனர். இது தவிர மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை என அனைத்திலும் தி.மு.க.வினரின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது. அண்மையில், போதை பொருள் கடத்தல் தொடர்பாக தி.மு.கூவைச் சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நேற்று பத்திரிகையில் வெளியான செய்திகள். வெளியாகாத செய்திகள் பல உள்ளன. இதுபோன்ற செயல்கள்தான் தமிழ்நாடு முழுவதும் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

தி.மு.க.வினரின் அராஜகத்தை, அத்துமீறல்களை கட்டுப்படுத்தி வைத்தாலே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் ஐம்பது விழுக்காடு குறைந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, பொதுமக்களின் கருத்திற்கு மதிப்பரிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையிலும், சட்டவிரோதமாக செயல்படுபவர்கள்மீது, காவல் துறையையே மிரட்டுபவர்கள்மீது, கட்சி வித்தியாசமின்றி கடும் நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.