நிதிஷ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.. மணிப்பூர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு..!

பீகாரில் பாஜக – நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கூட்டணியில் குழப்பம் நீடித்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து அதிரடியாக விலகியது.

கூட்டணியை முறித்துக் கொண்டது.

இதையடுத்து, தேஜஸ்வி யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து புதிய அரசு அமைந்தது. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், மணிப்பூரில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களில் 5 எம்எல்ஏக்கள் நேற்று (செப்.2) பாஜகவில் இணைந்தனர். குமுச்சம் ஜாய்கிஷன் சிங், நுர்சங்லூர் சனேட், எம்.டி. ஆசாப் உதீன், தங்ஜம் அருண்குமார், எல்.எம்.கௌட் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

முன்னதாக மணிப்பூர் முதலமைச்சரும் பாஜக தலைவருமான பிரேன் சிங் வியாழக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார். அதேபோல் 5 எம்எல்ஏக்களும் பீகார் புறப்பட்டனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 5 எம்.எல்.ஏ.க்களும் பாட்னா செல்வதாக ஜேடியு தலைவர் கேஷ் பிரேன் தெரிவித்திருந்தார்.

மணிப்பூரின் மற்றொரு ஜேடியு எம்எல்ஏ அப்துல் நசீரும் பாஜகவில் இணைய உள்ளதாக அக்கட்சி வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என கேஷ் பிரேன் தெரிவித்தார்.

மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 தொகுதிகளில் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் பதவியேற்றார்.

ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 5 எம்எல்ஏக்கள் விலகிய நிலையில் பாஜகவில் தற்போது 37 எம்எல்ஏக்கள் உள்ளனர்.