தெலுங்கானா: தெலுங்கானாவில் பலபொரு ரங்காரெட்டி திட்டத்தில் நீர் ஏற்றும் பணி நடக்கும் போது 100 அடி ஆழ சுரங்கத்திலிருந்து கிரேன் மூலம் தொழிலாளர்கள் மேலே வந்த போது இரும்பு சங்கிலி அறுந்து விழுந்ததில் 5 கூலி தொழிலாளிகள் உயிரிழந்து இருக்கிறார்கள்.
தெலுங்கானா மாநில அரசு சார்பில் நகக்கண்ணில், மல்குபென்னகர், நாராயணப்பேட்டை, விக்ரபாத், ரங்காரெட்டி, நல்கொண்ட மாவட்டங்களில் உள்ள மலை பகுதிகளில் பாசன வசதி உருவாக்குவதற்காக 12 லட்சம் ஏக்கருக்கு விவசாயத்திற்கு பயன்படும் விதமாகவும், கிராமங்களின் குடிநீர் தேவையை அதிகரிக்கவும், ஹதராபாத் மாநகராட்சி மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காகவும் பலபொரு ரங்காரெட்டி நீரேற்று திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதி நீரை ஸ்ரீசைலம் அணையிலிருந்து ரங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சார் நகரில் கேபி லட்சுமி தேவிப்பள்ளி நீர் தேக்கத்திற்கு கொண்டு வரும் திட்டமாகும். இந்த திட்டத்திற்காக அரசு சார்பில் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று பணிகளுக்காக வந்த கொல்லாவர மண்டலம் எல்லூரு கிராமத்தில் நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். பீகாரை மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கூலி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் 100 அடி ஆழம் உள்ள சுரங்க பாதையில் கான்கிரிட் வேலைகளை செய்து கொண்டிருந்த 7 கூலி தொழிலாளர்கள் மீண்டும் பணிகளை முடித்து கொண்டு நேற்று நள்ளிரவு 11 மணிக்கு கிரேன் மூலம் மேலே வந்துகொண்டிருந்தனர். அப்போது கிரேன் மூலம் 70 அடி உயரத்திற்கு மேலே வந்த நிலையில் கிரேனில் கட்டப்பட்டிருந்த இரும்பு சங்கிலி அருந்ததன் காரணமாக அந்த 7 கூலி தொழிலாளர்களும் 70 அடி பள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். காயமடைந்த கூலி தொழிலாளிகளை அனைவரையும் மீட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மோனிய அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 கூலி தொழிலாளிகள் இன்று காலை உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சீனு என்பவரும், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த போலோநாத், மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 20 வயது கொண்ட பிரவீன், கமலேஷ் மற்றும் சோனு குமார் ஆகிய 5 கூலி தொழிலாளர்கள் இறந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கொல்லாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.