41 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – வீதியில் குப்பை வீசினால் அபராதம்!!!

கோவையில் 41 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் வீதியில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படுகிறது.ஏடீஸ் கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி ஆகிறது. மழை நீரில் அதிக எண்ணிக்கையில் டெங்கு கொசு உருவாகும் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி இருப்பதால் டெங்கு பரவனும் நகரில் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது :-

கோவை நகரில் இந்த மாதம் இதுவரை 41 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 162 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 1,220 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் 2,020 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசு புழுவை உருவாக்கும் வகையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பது, மூடி அமைக்காமல் இருப்பது, டயர், தேங்காய் சிரட்டைகள் தண்ணீர் இருந்தும் அகற்றாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கட்டிட உரிமையாளர்களுக்கு இதுவரை ரூபாய் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தொட்டியில் போடாமல் குப்பைகளை வீதியில் வீசியவர்கள், வணிக வளாகப் பகுதிகளில் குப்பைகளை தேங்க காரணமாக இருந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதுவரை ரூபாய் 16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பது மற்றும் பயன்படுத்தியவர்களுக்கு ரூபாய் 31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.