சென்னை: துபாயில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் பதுக்கிய ரூ.1.65 கோடி மதிப்பிலான 32 தங்கக்கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. பயணிகள் இறங்கிய பிறகு அந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, கழிவறையில் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி ஊழியர்கள் விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், பாதுகாப்பு படையினரும், சுங்கத்துறை அதிகாரிகளும் வந்து பார்சலை பிரித்து பார்த்தனர். அதற்குள் ரூ.1.65 கோடி மதிப்பில் 3.730 கிலோ எடையிலான 32 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானத்தில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, இதை கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.