கோவை அருகே உள்ள பச்சாபாளையம், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முருகேசன், கூலி தொழிலாளி. இவரது மகன் பிரவீன் ( வயது 17 )அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் கவின் குமார் (வயது 16) வேலுச்சாமியின் மகன் தக்சன் ( வயது 17 )ராமசாமி மகன் சஞ்சய் (வயது 17) இவர்கள் 4 பேரும் தீத்திபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். ஒரே பள்ளியில் படித்ததால் இவர்கள் 4 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் விடுமுறை நாட்களில் அந்த பகுதியில் ஒன்றாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்போது பொது தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பிரவீன், கவின், தக்சன், சஞ்சய், ஆகியோர் வெளியே சென்று விளையாடி வந்தனர். பின்னர் இவர்கள் 4 பேரும் நேற்று மாலை காருண்யா நகர் அருகே பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை ஆற்று தடுப்பணைக்கு குளிக்க சென்றனர். 40 அடி ஆழமுள்ள அந்த தடுப்பனையில் தற்போது 15 அடிக்கு தண்ணீர் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை கண்டதும் மாணவர்கள் அதில் உற்சாகமாக குளித்தனர். அப்போது மாணவர்கள் பிரவீன், கவின், தக்சன், சஞ்சய் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதில் சஞ்சய் மட்டும் தத்தளித்தபடி கறைக்கு வந்துவிட்டார். மற்றும் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். நண்பர்கள் தண்ணீரில் மூழ்கிய தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சஞ்சய் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள். என்று அபாய குரல் எழுப்பினார். உடனடியாக இதுகுறித்து காருண்யா நகர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தடுப்பணையில் மூழ்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு பிரவீன், தக்சன், கவின்ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர. அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0