கோவை ரெயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.

கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயில் வந்தது. அந்த ரெயிலில் கோவை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏட்டு பத்ம கிருஷ்ணன் ஆகியோர் சோதனை நடத்தினார்கள். அப்போது எஸ். 2 என்ற முன்பதிவு பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் அவர்களது பையில் 8 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் ரெயிலை விட்டு கீழே இறக்கி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் அசாம் மாநிலம், நாகோன் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், ரிப்புல் அலி, ஜியாபுர் ரகுமான் என்பதும், அங்கிருந்து ரெயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 3 பேரையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.