கோவையில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம், பாரதியார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 32) இவர் சோமனூர் ரயில்வே பாலத்துக்கு அடியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது 3 ஆசாமிகள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கினார்கள். அங்கிருந்த 28 பாக்கெட் சிகரெட், 2 மியூசிக் பிளேயர் ஆகியவற்றை திருடி கொண்டு வெளியே வந்தனர். இதைப் பார்த்த பக்கத்து கடைக்காரர் சிவக்குமார், தங்கவேலுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த 3 கொள்ளையர்களையும் மடக்கி பிடித்தார்.அவர்கள் கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சோமனூர் கிருஷ்ணாபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்த அரவிந்த் ( வயது 19 )சர்ச் வீதியைச் சேர்ந்த அந்தோணிசாமி (வயது 19 ) தீப்பெட்டி மில் ரோடு கார்த்தி என்ற சின்ன பையன் ( வயது 19) என்பது தெரிய வந்தது. இவர்கள் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள்..