பாரிஸ்: பசிபிக் பெருங்கடலில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் நாட்டு விமானப்படையின் போர்விமானங்கள் தற்காலிகமாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் ராணுவ விமான தளத்தில் ஓய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன.
சுமார் 16,000 கிலோ மீட்டர் கொண்ட இந்த பயணத்தில் தொழில்நுட்ப சரிபார்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக பிரான்ஸ் இந்த இடை நிறுத்தலை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையே போடப்பட்ட ராணுவ உடன்படிக்கையின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டு போர்விமானங்களை இந்திய எல்லைக்குள் மத்திய அரசு அனுமதித்துள்ளது.
சுமார் ரூ.731 கோடி மதிப்பு கொண்ட உலகின் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டு விமானப்படையின் ரஃபேல் போர் விமானம் ஓய்வுக்காக தமிழ்நாட்டில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தனது விமானப்படையின் திறமையை நிரூபிக்க சுமார் 16,000 கி.மீ தொடர் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது பிரான்சிலிருந்து அந்நாட்டுக்கு சொந்தமான மற்றொரு தீவான ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள ‘நியூ கலிடோனியா’ தீவிற்கு செல்ல திட்டமிட்டு பயணத்தை தொடங்கியிருந்தது.
இந்த ரஃபேல் போர் விமானம் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 3 ஆயிரத்து 700 கி.மீ தூரம் மட்டுமே செல்லும். எனவே மீண்டும் எரிபொருள் நிரப்பவும், விமானப்படையினர் ஓய்வெடுக்கவும் நிச்சயம் ஓர் இடை நிறுத்தல் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் பிரான்ஸ் நாட்டின் 3 ரஃபேல் போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையே போடப்பட்ட ராணுவ உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த உதவியை இந்தியா செய்துள்ளது.
கடந்த 10ம் தேதி சூலூருக்கு வந்த இந்த விமானங்கள், 11ம் தேதி அதிகாலையில் எரிபொருளை நிரப்பியதையடுத்து மீண்டு பறந்து சென்றுள்ளது. இது குறித்து அந்நாட்டு விமானப்படை தரப்பில், “இந்தியாவின் இந்த உதவி, பிரான்ஸ் மற்றும் இந்திய விமானப்படைகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் இயங்கு தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு விமானப்படைகளும் தற்போது ரஃபேல் விமானங்களை கொண்டிருப்பதன் மூலம் இந்த உறவு மேலும் மேம்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
மேலும், “பிரான்ஸ் நாடானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் குடியுரிமை சக்தியாகும்” எனக்கூறி இந்திய விமானப்படையின் உதவிக்கு இந்தியாவின் பிரான்ஸ் நாட்டிற்கான தூதர் இமானுவேல் லெனைன் நன்றி தெரிவித்துள்ளார். “இந்த பணியை நிறைவேற்ற, பிரான்ஸ் இந்தியாவை நம்பியிருப்பது இயற்கையானது, ஆசியாவில் பிரான்ஸ் நாட்டின் முதல் கூட்டாளி இந்தியாதான். ‘மிஷன் பெகேஸ் 22’ எனப்படும் மேற்குறிப்பிட்ட பயண திட்டத்தின் அடுத்தகட்டமாக ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 10 வரை “பிட்ச் பிளாக்” விமானப் பயிற்சி நடைபெறுகிறது” என்றும் இமானுவேல் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவுடன் இந்திய விமானப்படையும் இந்த பலதரப்பு பயிற்சியில் பங்கேற்கும். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் உள்ள ‘நியூ கலிடோனியா’ தீவு பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானதாகும். ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்த இந்த பகுதியில் அந்நாடு ராணுவ பயிற்சி மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.