கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). இவர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை மோட்டார் சைக்கிளில் நிறப்பி அங்கிருந்து தப்பினர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி குணசேகரன் அவர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த வாலிபர்களை தேடினார்.
அப்போது அருகில் 3 வாலிபர்களில் ஒருவர் மட்டும் இருந்தார். அவரை குணசேகரன் மடக்கி பிடித்தார். பின்னர் கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண்பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.