தண்ணீர் தொட்டிக்குள் மூச்சு திணறி 2 தொழிலாளர்கள் சாவு.

கோவை சின்னவேடம்பட்டி அருகே உள்ள உடையாம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் ( வயது 47) இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகளை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த கோவிந்தனின் மகன் குமார் (வயது 29) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மேஸ்திரியான குமார் தனது வேலையாட்களான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் ( வயது 27 )மற்றும் சிலருடன் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு புதிதாக தண்ணீர் தொட்டிக்கு கான்கிரீட் போடப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இந்த தண்ணீர் தொட்டியின் உட்பகுதியில் கான்கிரிட் போட அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகைகளை பிரிக்க மனோஜ் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது தொட்டிக்குள் ஆக்சிஜன் பற்றாக் குறையால் மூச்சு திணறி தொட்டிக்குள் மனோஜ் மயங்கி விழுந்தார். இதை பார்த்த குமார் ஓடி வந்து தண்ணீர்தொட்டிக்குள் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு விழுந்தார் .இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மேலே கொண்டு வந்தனர். அதற்குள் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று குமார், மனோஜ் ஆகியோரின் பிணங்களை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதலில் இவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி இருந்ததாக கூறப்பட்டது. பின்னர்தான் தண்ணீர் தொட்டிக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளது தெரிய வந்தது .கடந்த வாரம் தான் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்ததது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.