தமிழகத்தில் 2 நாட்கள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்தாலும், நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை 1025, செங்கல்பட்டு 369, திருவள்ளூர் 121, காஞ்சி 84, குமரி 72, திருச்சி 67, நெல்லை 64, தூத்துக்குடி 54, மதுரை 49 தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் வார இறுதி நாட்களில்( சனி, ஞாயிறு) ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.