திமுகவின் தீவிர கொள்கை பிடிப்பாளரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.
திமுக தலைமை மீது கடந்த சில வருடங்களாகவே அவர் அதிருப்தியில் இருந்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் மூத்த நிர்வாகிகளாக இருக்கும் பல தலைவர்களின் மகன்களுக்கு எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கும்போது, தனக்கு கட்சி பதவியாவது கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கும் திமுக தலைமை கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்த சூர்யா சிவா, பா.ஜ.கவுக்கு செல்ல முயற்சி எடுத்துள்ளார்.
அவரின் பா.ஜ.கவுக்கு செல்ல இருக்கும் தகவல் ஊடகங்களில் அரசல் புரசலாக வெளியானது. இது குறித்து சூர்யா சிவாவிடம் கேட்டபோது, திமுக மீது அதிருப்தியில் இருப்பதை வெளிப்படையடையாக கூறினார். மேலும், தான் பா.ஜ.கவுக்கு செல்ல இருப்பது உறுதி எனக் கூறிய அவர், சுற்றுப் பயணத்தில் இருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே, கேரள சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை சந்தித்து, பா.ஜ.கவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
இனி வரும் காலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.கவினர் திமுகவின் குடும்ப அரசியலுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த நிர்வாகியான மாநிலங்களை உறுப்பினர் திருச்சி. சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்துள்ளார் என கூறியுள்ளனர். இதேபோல், இன்னும் சிலர் பா.ஜ.கவில் இணைய இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தமிழக பா.ஜ.கவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
தலைமை இசைவு தெரிவித்தால் உடனடியாக கட்சியில் சேர்த்துவிடுவோம் எனவும் அவர் புது குண்டு ஒன்றை வீசியுள்ளார். அவரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் சேர்ந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, வழக்கமாக மாற்றுக் கட்சியில் சிலர் இணைவது போன்றது தான் இது என கூறியுள்ளார்.