தமிழக அரசு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்களுக்கு அரசு விடுமுறையை அறிவித்து உள்ளது. தொடர் விடுமுறையை அடுத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.
இதுபற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 10-13 தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுவரை 1.73 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும், இணையத்திலும் பேருந்துகளை முன்பதிவு செய்யலாம்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஜன.15 முதல் 19 வரை மொத்தம் 15,800 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊர் சென்றுவர மொத்தம் 22,676 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இரண்டு நாள்கள் ஆலோசனை நடைபெற்றது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும். மதுரவாயல், கோயம்பேடு சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.