தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் 1,383 புகார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டால் அருகில் உள்ள காவல்நிலையங்களில் அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். ஆனால், இதுவரை 568 பேர் ஒப்படைக்கவில்லை. ஒருவேளை, அவர்கள் வெளிநாடுகளில் இருக்கலாம். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம். இங்கு சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடத்தை விதிமீறல் உட்பட தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘சி-விஜில்’ செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம். நிகழ்நேர வீடியோ அல்லது புகைப்படத்தை அனுப்பினால், அந்த ஆதாரம் அடிப்படையில், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை, இந்த செயலி மூலம் 1,383 புகார்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னம்: வேட்புமனு நிராகரிப்பை பொறுத்தவரை, அதற்கான பிரத்யேக காரணங்களை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. ஒரு வேட்பாளர் பெயர் வாக்காளர்பட்டியலில் 2 இடங்களில் இருக்கும்பட்சத்தில், தேர்தல் ஆணைய விதிகளின்படி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மட்டுமே உள்ளது. மார்ச் 29-ம் தேதி (இன்று) புனித வெள்ளி, பொது விடுமுறை தினம் என்பதால், வேட்புமனுக்களை வாபஸ் பெற இயலாது. மனுக்களைவாபஸ் பெற 30-ம் தேதி மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஒரு வேளை மத்திய அரசு இதற்கு அனுமதி பெற்றிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.