ரூ.12.82 கோடி ஆவணம், 1024 கிராம் தங்கம் பறிமுதல்.. மணல் குவாரிகள் அதிரடி சோதனை- அமலாக்க துறை வெளியிட்ட முக்கிய தகவல்..!

சென்னை: மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத் துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் பல முக்கிய மணல் ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அன்று காலை தொடங்கிய ரெய்டு இரண்டு நாட்கள் வரை நீட்டித்தது. இதற்கிடையே இந்த ரெய்டு குறித்து அமலாக்க துறை விளக்கம் அளித்துள்ளது.

மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த இந்த சோதனையில் ரூ. 2.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ. 12.82 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 1024 கிராம் தங்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமலாக்க துறை தனது ட்விட்டரில், “தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் கடந்த 12ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது. எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ், நீர்வளத் துறை அதிகாரிகள் என பலரது வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் என மொத்தம் 34 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

மணல் கொள்ளை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 12.82 கோடி ரூபாய் இதில் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத ₹ 2.33 கோடி பணம், ₹56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்