மலேசியாவில் தொடங்கியது 11-வது உலகத்தமிழ் மாநாடு!

லேசியாவில் தொடங்கியுள்ள 11-வது உலகத்தமிழ் மாநாட்டில் ஏராளமான தமிழறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்..

தமிழ் மொழிக்கு உலக அளவில் கவனத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்.

உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது.

இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல், தற்போது வரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரிலும், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரீசியஸில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், 11-வது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்னர். இணையக் காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். ரூ.25 கோடி செலவில் நடைபெறும் இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாடு 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.