சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டிடங்கள், 18 சிறைகள், சீர்திருத்தத்துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 58 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான குடியிருப்புகள், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பணிநிமித்தம், வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை இயக்குனராக வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்புத்துறை வீரவணக்க நினைவு சின்னத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ச்சியாக, போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே போக்குவரத்து சேவைகளை பெறுவதற்கான திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஓட்டுநர் உரிமத்தின் நேரடி தொடர்பில்லாத சேவைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது.