கோவையில் லாட்டரி வியாபாரி வீட்டில் ரூ.2.25 கோடி சிக்கியது

கோவை மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று மாவட்டம் முழு வதும் 29 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன்படி கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருமத்தம்பட்டியை அடுத்த சென்னி ஆண்டவர் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார் .அப் போது அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் லாட்டரி சீட்டுகளும், பணமும் இருந்தது. விசாரணையில் அவர் செந்தில் நகரை சேர்ந்த நாகராஜ் ( வயது 42) என்பதும் இவர் கேரள மாநில எல்லை பகுதியான வாளையாரில் இருந்து லாட்டரி சீட்டு களை வாங்கி வந்து கோவை மாவட்டத்தில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அவரது வீடு குப்பையாகவும் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த அட்டைப் பெட்டிகளில் லாட்டரி சீட்டுகள் உள்ளனவா? என்று சோதனை செய்தனர் .அப்போது அங்கிருந்து அட்டைப் பெட்டிகளில் கட்டு கட்டாக ரூ, 500 ரூ200 ரூ50 என ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கட்டுக் கட்டாக பணம் சிக்கியது குறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் கருமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் வருவாய் ஆய்வாளர் மாணிக்கவாசகம் மற்றும் போலீசார் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 – 30 மணிக்கு இந்த பணி தொடங்கிமாலை 4 – 30 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் ரூ.2 கோடியே 25 லட்சம் இருந்தது .இதில் 112 செல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன. லாட்டரி வியாபாரி வீட்டில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதை யடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜன் கைது செய்து அவரிடமிருந்து 1800 கேரளா லாட்டரி சீட்டுகள் , 2 செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான நாகராஜ் மீது லாட்டரி சீட்டு விற்றதாக அவிநாசி, அன்னூர், கருமத்தம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் 5வழக்குகள் நிலுவையில் உள்ளன. வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் லாட்டரி சீட்டுகள் விற்றதில் கிடைத்த வருமானம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது லாட்டரி வியாபாரி வீட்டில் ரூ 2.25 கோடி சிக்கியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.