ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 102 பேர் கண்டுபிடிப்பு – 3 பேர் கைது..!

சென்னை: தமிழகத்தில், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கவராத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என, 102 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவை, உக்கடம் பகுதியில் உள்ள, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, அக்., 23ல், கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 29, தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியானார். பின், இவரது கூட்டாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களின் வீடுகள் உட்பட, தமிழகம் மற்றும் கேரளாவில், நேற்று முன்தினம் 43 பேரின் வீடுகளில், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.மேலும், தமிழகத்தில் ஐ.எஸ்., உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என, 102 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், 90 பேரிடம், தமிழக போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்; மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், சென்னை, மண்ணடி மரைக்காயர் தெருவில் உள்ள அலுவலகம் ஒன்றில், 2021 மார்ச் மாதம், சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட சென்றனர்.

அப்போது, அங்கிருந்த மூன்று பேர், அதிகாரிகளை தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மண்ணடியைச் சேர்ந்த சிக்கந்தர், 40, ராஜா முகமது, 41, முகமது ஹசன், 36 ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மற்றும் 16 லட்சம் ரூபாய்க்கான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கைதாகியுள்ள மூவரில், சிக்கந்தர், ராஜா முகமது ஆகியோருக்கு, பயங்கரவாத அமைப்புடன் உள்ள தொடர்பு பற்றி, சில ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தானில் இருந்து வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், இவர்களது அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக, போலீசார் தெரிவித்தனர்.பயங்கரவாத தடுப்பு பிரிவு துவக்கம்பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்க, தமிழக காவல் துறையில், மூன்று பிரிவுகள் செயல்படுகின்றன.கோவை கார் குண்டு வெடிப்புக்கு பின், காவல் துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில், புதிதாக பயங்கவாத தடுப்பு பிரிவு துவங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, கூடுதல் டி.ஜி.பி., அல்லது ஐ.ஜி., தலைமை ஏற்பார் என, காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.