ஊட்டியில் சொகுசு பங்களா கட்டி தருவதாக ௹ 1.45 கோடி மோசடி. கோவை கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் கைது.

கோவைதுடியலூர் பக்கம் உள்ள வெள்ள கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் சென்னை டி.நகர் பகுதியில் “நாதன் பவுண்டேஷன்” என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார் .கடந்த 2014 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் “சொகுசு காட்டேஜ்” கட்டி விற்று வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மாத வாடகையாக பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தை நம்பிய சென்னை சீனிவாசா அவென்யூ ரோடு பகுதியை சேர்ந்த இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் என்பவர் நாதன் பவுண்டேஷன் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அப்போது நாதன் பவுண் டேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கரலிங்கம் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காட்டேஜ் கட்டி தர இருப்பதாகவும் அதில் முதலீடு செய்யும்படியும் ஆசை வார்த்தை கூறினார் .இதை நம்பிய இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் கடந்த 2014 ஆம் ஆண்டு நாதன் பவுண்டேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் அருகே இடத்தை நாதன் பவுண்டேஷன் நிர்வாக இயக் குனர் சங்கரலிங்கம் காண்பித்துள்ளார் .பிறகு அங்கு கட்டுமான பணிகளை துவக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதை நம்பிய இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் வங்கி கணக்கு மூலம் 1 கோடியே 45 லட்சத்து 42 ஆயிரத்து 815 ரூபாயை பல்வேறு தவணைகளாக நாதன் பவுண்டேஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தைப் பெற்ற பிறகு கட்டுமான பணிகள் எதையும் துவக்காமல் சங்கரலிங்கம் இருந்துள்ளார் . ஊட்டியில் கட்டிட அனுமதி கிடைப்பதற்கு தாமதமாகிறது என்றும் இன்னும் சில நாட்களில் பணிகள் துவங்கி விடும் என பல்வேறு காரணங்களை தொடர்ந்து கூறி வந்தார். இதேபோல நாதன் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்களிடமும் முதலீடு செய்தால் மாதம்தோறும் நல்ல வருமானம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ஏராள மானவரிடம் பல கோடி ரூபாயை சங்கரலிங்கம் பெற்றார் .ஆண்டுகள் பல ஆனாலும் கட்டுமான பணிகளை துவங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். தொடர்ந்து இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் தான் செலுத்திய பணத்தை திருப்பித் தருமாறு சங்கரலிங்கத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தையும் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாதன் பவுண்டேஷன் மற்றும் நாதன் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் சங்கரலிங்கம் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு சங்கரலிங்கம் தான் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறியிருந்தார் ஆனாலும் அவர் தொடர்ந்து பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். பின்னர் சங்கரலிங்கம் தலைமறைவானார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதை தொடர்ந்து சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கோவையில் பதுங்கியிருந்த நாதன் பவுண் டேஷன் நிர்வாக இயக்குனர் சங்கரலிங்கத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சங்க ரலிங்கம் எவ்வளவு பேரிடம் எத்தனை கோடி மோசடி செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.